×

கடமலை-மயிலை ஒன்றியத்தில் கால்நடைகளுக்கு மர்மநோய் தாக்குதல்

வருசநாடு, டிச. 5: கடமலை-மயிலை ஒன்றியத்தில் கால்நடைகளுக்கு மர்மநோய் தாக்கியுள்ளதால், கால்நடை வளர்ப்பவர்களும், விவசாயிகளும் கவலை அடைந்துள்ளனர். கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள தும்மக்குண்டு, காந்திகிராமம், வாலிப்பாறை, சீலமுத்தையாபுரம், குமணன்தொழு, அரசரடி, காமராஜபுரம், மஞ்சனூத்து, வனத்தாய்புரம் உள்ளிட்ட பகுதிகளில் சமீபத்தில் கனமழை பெய்தது. இதனால், கால்நடைகளுக்கு மர்மநோய் பரவி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த நோயை குணப்படுத்த தனியார் மருந்துக்கடைகளில் அதிக விலைக்கு மருந்து வாங்கி கொடுப்பதாகவும் கூறுகின்றனர். இதனால், பணம் விரயம் ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

மேலும், இந்த ஒன்றியத்தில் 5க்கும் மேற்பட்ட கால்நடை மருத்துவமனை இருந்தும், தனியார் மருந்துக் கடைகளில் மருந்து வாங்குகிறோம் என வேதனை தெரிவித்துள்ளனர். கால்நடை வளர்ப்பவர் கருப்பையா கூறுகையில், ‘இப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு மர்மநோய் பரவி வருகிறது. இதனால், நாட்டுமாடு, வெள்ளாடு, செம்மறி, ஆடு ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, ஒன்றியத்தில் உள்ள மலைக்கிராமங்களில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்க வேண்டும்’ என்றார்.   சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘கால்நடைகளுக்கு மர்மநோய் தாக்கியுள்ள நிலையில், சிகிச்சை அளிக்க வேண்டிய கால்நடை மருத்துவர்கள் சரியாக வருவதில்லை என விவசாயிகளும், கால்நடை வளர்ப்பவர்களும் புகார் தெரிவிக்கின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Katamalai ,Mayilai ,Union ,
× RELATED ராஜ்புத்திர சமூகத்தினர் பற்றி...